சீதாப்பிராட்டியை இராவணன் கவர்ந்து சென்றபோது ஜடாயு எதிர்த்து போரிட்டு உயிர் துறந்தது. சீதையைத் தேடிக் கொண்டு வந்த இராமபிரான் ஜடாயுவிற்கு இறுதிக் கடன்களைச் செய்தமையால் இத்தலம் 'புள்ளம்பூதங்குடி' (புள்-பறவை) என்று அழைக்கப்படுகிறது. இராமபிரான், ஜடாயுவுக்கு மோட்சம் அளித்தபிறகு சிரமப் பரிகாரத்திற்காக இத்தலத்தில் சயனித்திருந்ததால் 'சிரமப்பரிகார பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். அதனால் பெருமாளுக்கு அம்பு, வில் போன்ற ஆயுதங்கள் இல்லை.
மூலவர் வல்வில்ராமன் என்ற திருநாமங்களுடன் கிடந்த திருக்கோலம், புஜங்க சயனம். கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்சவ மூர்த்தியான இராமபிரானுக்கு சதுர்புஜங்கள் உள்ளன. சீதையை பிரிந்த நிலையாதலால் பக்கத்தில் சீதை இல்லை. பூமிப்பிராட்டி மட்டுமே அமர்ந்திருக்கிறார். தாயாரும் 'பொற்றாமரையாள்', 'ஹேமாம்புஜவல்லி' என்னும் திருநாமத்துடன் தனி சன்னதியில் உள்ளார்.இராமபிரானுக்கும், கிருத்ரராஜனுக்கு பெருமாள் இங்கு பிரத்யக்ஷம்.
இங்கு இராமநவமியை முன்னிட்டு திருவிழா நடைபெறுகிறது. இராமநவமியை கடைசி நாளாகக் கணக்கிட்டு இங்கு உற்சவம் நடைபெறுவதால் 'கர்ப்போத்சவம்' என்று அழைக்கப்படுகிறது. இராமநவமியைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் உத்சவத்திற்கு 'ஜனனோத்சவம்' என்று பெயர்.
இங்குள்ள நரசிம்மர் 'உத்யோக நரசிம்மர்' என்று அழைக்கப்படுகிறார். அஹோபில மடத்தின் நிர்வாகத்தில் உள்ளது. கோயில் அருகிலேயே உள்ள மடத்தில் வசதிகள் உள்ளன. அருகிலேயே திருஆதனூர் திவ்ய தேசம் உள்ளது. இரண்டு தலங்களையும் ஒருங்கே சேவிக்கலாம்.
திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். கோயில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|